6 மாதங்களாக பணம் கொடுக்கவில்லை:கரியாலூர் போலீஸ் நிலையம் பெயரில் டீ கடையில் ரூ.5 ஆயிரம் கடன்முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு சென்ற புகாரால் போலீசார் கலக்கம்

கரியாலூர் போலீஸ் நிலையம் பெயரில் ஒரு டீக்கடையில் ரூ.5 ஆயிரம் கடன் உள்ளதாகவும், 6 மாதங்களாக பணம் தராமல் உள்ளனர் என்றும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு சென்ற புகாரால் போலீசார் கலக்கமடைந்துள்ளனர்.

Update: 2023-08-18 18:45 GMT


கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கரியாலூர் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்று மொத்தம் 10 போலீசார் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்கள் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தனர். இங்கு ஒரு டீ விலை 6 ரூபாய் ஆகும். அவ்வப்போது கடைக்கு நேரடியாக சென்றும், சில நேரங்களில் போலீஸ் நிலையத்துகே வரவழைத்தும் டீ குடித்து வந்தனர்.

ரூ.10 ஆயிரத்தை நெருங்கிய கடன்

இவ்வாறாக இருந்த நிலையில், டீ குடித்ததற்கான பணம் செலுத்தப்படவில்லை. இதன் மூலம் கடன் ரூ.10 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. இதில் சில மாதங்களுக்கு முன்பு 3 ஆயிரம் வரைக்கும் போலீசார் செலுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் மீதம் உள்ள தொகையை கண்டுகொள்ளவில்லை. இதுபற்றி டீக்கடைக்காரர் தரப்பில் இருந்து போலீஸ் நிலையத்தில் எப்படி கேட்பது என்று ஒருவித தயக்கத்துடனே இருந்துள்ளார்.

இதற்கிடையே இந்த டீக்கடை கடன் பிரச்சினை, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகாராக சென்றுவிட்டது.

6 மாதங்களாக தரவில்லை

இந்த புகார் நேற்று கரியாலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில் கடந்த 6 மாதங்களாக போலீஸ்காரர்கள் குடித்த டீக்கு ரூ.5 ஆயிரம் வரைக்கும் கடன் உள்ளது. இதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டீக்கடை கடனை எந்த கணக்கில் சரிசெய்வது என்று போலீசார் யோசனையில் இருந்த நிலையில், உயர் அதிகாரிகள் வரைக்கும் புகார் சென்றது, கரியாலூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

விசாரணை

அதேநேரத்தில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு டீக்கடை உரிமையாளர் தரப்பில் இருந்து புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டதா? அல்லது போலீஸ் நிலையத்துக்கு உள்ளேயே இருந்து யாரேனும் இந்த மனுவை அனுப்பி வைத்தார்களா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த டீக்கடை கடன் விவகாரம் வெளியே தெரியவந்ததால், போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்