மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து வீட்டின் மீது வீச்சு
மயிலாடுதுறை அருகே மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து வீட்டின் மீது வீச்சி 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து வீட்டின் மீது வீச்சி 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாட்டில்கள் சிதறி கிடந்தது
மயிலாடுதுறை தாலுகா சித்தர்காடு அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு குமரேசன், முத்துக்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். முருகன் சென்னையில் சிற்ப வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராதிகா நேற்று அதிகாலை கோலம் போடுவதற்காக வீட்டு கதவை திறந்துள்ளார்.
அப்போது வீட்டு வாசலில் பாட்டில்கள் சிதறியும், சுவர் கருமையாகவும், அருகில் இருந்த செடி கருகியும் இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில், கடந்த கடந்த 5-ந் தேதி சோழியத்தெருவை சேர்ந்த அஜீத்குமார் (24) என்பவர் தனது நண்பர் நவீன்ராஜூடன் குத்தாலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேரிட்ட சாலை விபத்தில் நவீன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நவீன்ராஜ் தரப்பில் அவரது தாய்மாமன் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட நண்பர்கள் அஜீத்குமாரின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே முத்துக்குமார் வீட்டில் அஜீத்குமார் உள்ளிட்ட 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சோழியத்தெருவை சேர்ந்த செல்வம் மகன் அஜீத்குமார் (24), நீடூரை சேர்ந்த ராஜன் மகன் வெங்டேஷ் என்கிற ராமன் (29) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் ஆகியோரை தேடி வந்தனர். இதில் அஜீத்குமார் மற்றும் ராமனை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பிரவீனை தேடி வருகின்றனர்.