ஓராண்டாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது
வியாபாரி கொலை வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் கைது செய்தனர்.
ராஜாக்கமங்கலம்:
வியாபாரி கொலை வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் கைது செய்தனர்.
வியாபாரி கொலை
நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 41), வியாபாரி. கடந்த 2011-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் பாபு என்ற கோபால கிருஷ்ணன், அய்யப்பன் ஆகியோர் செல்வக்குமாரை கொலை செய்தனர். இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தொழிலாளிகள்.
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆயுள் தண்டனை
இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் 3 பேர் சார்பில் மேல் முறையீடு செய்தனர். இதற்கிடையே 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். பின்னர் கடந்த ஆண்டு கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.
இதனை தொடர்ந்து மணிகண்டன், பாபு, அய்யப்பன் ஆகிய 3 பேரும் 2 வார காலத்திற்குள் சரண் அடைய வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இதில் அய்யப்பன் மட்டும் சரண் அடைந்தார். மணிகண்டன், பாபு இருவரும் தலைமறைவாக இருந்தனர்.
தலைமறைவாக இருந்தவர் கைது
இந்தநிலையில் பாபு நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நேற்று திசையன்விளை பகுதிக்கு விரைந்து சென்று பாபுவை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.