சேலம் கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்தியஆயுள் தண்டனை கைதி கோவை சிறைக்கு மாற்றம்

Update: 2023-08-06 20:04 GMT

சேலம்

சேலம் கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆயுள் தண்டனை கைதி கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை கைதி

சேலம் மத்திய சிறையில் சாராய ஊறல் போடப்பட்டதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் ஆயுள் தண்டனை கைதி மாங்கா பிரபு (வயது 39) என்பவரை அதிகாரிகள் தனி அறையில் அடைத்திருந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மற்றொரு கொலை வழக்கில் மாங்கா பிரபு மற்றும் அவனது கூட்டாளிகள் அய்யனார், அய்யந்துரை ஆகியோர் சேலம் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அப்போது, சிறையில் சாராய ஊறல் போட்டது நாங்கள் இல்லை எனக்கூறி கோர்ட்டு வளாகத்தில் கைதிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். அதன்பிறகு மீண்டும் கைதி மாங்கா பிரபுவை அதிகாரிகள் மத்திய சிறையில் அடைத்தனர்.

இருப்பினும் சாராய ஊறல் போடவில்லை எனக்கூறி சிறையில் அவர் சாப்பிடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சிறை விதிகளின்படி கைதிகள் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமானால் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் கொடுக்க வேண்டும்.

கோவைக்கு மாற்றம்

ஆனால் மாங்கா பிரபு, சிறை அதிகாரிகள் கொடுக்கும் உணவை சாப்பிடாமல் கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு சாப்பிடவில்லை எனக்கூறி அதிகாரிகளை ஏமாற்றும் வகையில் சாராய ஊறல் விவகாரத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் நாடகமாடியது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கைதி மாங்கா பிரபு சேலத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அவர், கோவை சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தார்.

சேலத்தில் நடந்த கொலை வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்து வருவதால் அவர் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டு இருந்தார். தற்போது அவரை மீண்டும் கோவை சிறைக்கு மாற்றி கூடுதல் சூப்பிரண்டு வினோத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்