வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகம்
திருக்கடையூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுமா? என வாசகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பொறையாறு:
திருக்கடையூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுமா? என வாசகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வாடகை கட்டிடத்தில் நூலகம்
திருக்கடையூரில் பொது நூலகத்துறையின் கீழ் கிளை நூலகம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தை திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள்நல்லூர், கண்ணங்குடி, இரவணியன்கோட்டகம், நட்சத்திரமாலை, வளையசோழகன், சீதைசிந்தாமணி, அபிஷேகக்கட்டளை, பிச்சைக்கட்டளை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நூலகம் வாடகை கட்டிடத்தில் தான் செயல்பட்டு வருகிறது.
போதுமான இடவசதியில்லை
இந்த நூலகத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த 29 ஆயிரத்து 847 புத்தகங்களும், 2 ஆயிரத்து 186 வாசக உறுப்பினர்களும் உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிகளவில் இந்த நூலகத்திற்கு வந்து பயன்பெற்று வருகின்றனர்.நூலகத்தில் போதுமான இடவசதியில்லாததால் பெரும்பாலான புத்தகங்கள் மழையில் நனைந்தும், பூச்சிகள் அரித்தும் சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
புதிய கட்டிடம்
இதை தொடர்ந்து திருக்கடையூர் ஊராட்சி நிர்வாகம் நூலகம் அமைக்க 2015-ம் ஆண்டு இடம் ஒதுக்கீடு செய்தது. நூலகம் தொடங்கப்பட்டு அரை நூற்றாண்டு காலமாகியும், நூலக கட்ட இடம் ஒதுக்கீடு செய்து 7 ஆண்டுகளாகியும், இன்னமும் பழைய வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருவதாக வாசகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே நூலகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் விரைவில் புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மாணவர்கள் மற்றும் வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.