டி.என்.பாளையம் அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது

டி.என்.பாளையம் அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

Update: 2023-08-06 21:22 GMT

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.

சிறுத்தைப்புலி அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளன. இதில் சிறுத்தைப்புலிகள் அடிக்கடி அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து, அங்கு கட்டப்பட்டிருக்கும் ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. சில நேரம் காவலுக்காக தோட்டத்தில் சுற்றும் நாய்களையும் விட்டு் வைப்பதில்லை.

இந்தநிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகுந்த சிறுத்தைப்புலி ஆடு, மாடுகளை வேட்டையாடியது. ராமசாமி என்பவருடைய தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட கன்றுக்குட்டியையும் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கடித்து கொன்றது.

கூண்டு வைத்த வனத்துறையினர்

முருகேசன் என்பவருடைய தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டையும் சிறுத்தைப்புலி வேட்டையாடியது. சிறுத்தைப்புலியின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதி விவசாயிகள் பீதியடைந்தனர். எனவே கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்கவேண்டும் என்று விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து டி.என்.பாளையம் வனத்துறையினர் ராமசாமி என்பவருடைய தோட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிக்கியது

அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ள ராமசாமியின் தோட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை அங்கு சென்று வனத்துறையினர் பார்த்தபோது கூண்டில் சிறுத்தைப்புலி சிக்கி இருப்பது தெரியவந்தது. உறுமியபடி ஆக்ரோஷத்துடன் கூண்டுக்குள் அங்கும் இங்கும் சிறுத்தைப்புலி ஓடியது.

பாய்ந்து சென்றது

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'பிடிபட்ட சிறுத்தைப்புலிக்கு 4 வயது இருக்காம். அது பெண் சிறுத்தைப்புலி' என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கூண்டுடன் சிறுத்தைப்புலியை வாகனத்தில் ஏற்றி தெங்குமரஹாடா வனப்பகுதியில் உள்ள மூலப்பட்டி என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கூண்டை திறந்ததும் அதிலிருந்து பாய்ந்தபடி சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் சென்றது.

ஆடு, மாடுகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியதால் கொங்கர்பாளையம் பகுதி விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்