டி.என்.பாளையம் அருகே கன்றுக்குட்டியை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி

டி.என்.பாளையம் அருகே சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை கடித்துக்கொன்றது.

Update: 2023-07-23 20:03 GMT

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை கடித்துக்கொன்றது.

கன்றுக்குட்டி

டி.என்.பாளையம் கொங்கர்பாளையம் அருகே உள்ள சமனா காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். இதில் பசு மாடு ஒன்று கடந்த 15 நாட்களுக்கு முன்பு கன்றுக்குட்டி ஈன்றது. இதைத்தொடர்ந்து பசு மாட்டுடன் கன்றுக்குட்டியை தனது தோட்டத்தில் கட்டி வைத்துவிட்டு நேற்று முன்தினம் இரவு ராமசாமி தூங்க சென்றுவிட்டார்.

அப்போது திடீரென சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கிகொண்டிருந்த ராமசாமி திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை காணவில்லை. மேலும் தோட்டத்தில் சிறுத்தைப்புலியின் கால்தடங்கள் பதிந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சிறுத்தைப்புலி கொன்றது

இதைத்தொடர்ந்து இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் தோட்டத்தில் இருந்து வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் கன்றுக்குட்டியை தேடிச்சென்றார். அப்போது அருகே உள்ள சோளக்காட்டில் கன்றுக்குட்டியின் உடல் கடித்து குதறப்பட்ட நிலையில் கிடந்தது.

வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தைப்புலி ராமசாமியின் தோட்டத்துக்குள் புகுந்து, கன்றுக்குட்டியை கடித்து இழுத்து அதை சோளக்காட்டில் வைத்து கொன்று தின்றுள்ளது. பின்னர் கன்றுக்குட்டியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது.

கூண்டு வைத்து பிடிக்கப்படும்

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நஞ்சப்பன் என்பவருடைய தோட்டத்தில் புகுந்த சிறுத்தைப்புலி ஆட்டுக்குட்டியை இழுத்து சென்று கடித்து கொன்றது. இதைத்தொடர்ந்து சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதை பிடிக்க நஞ்சப்பன் தோட்ட பகுதியில் வனத்துறையினர் கூண்டு அமைத்து வருகின்றனர்.

அதற்குள் சிறுத்தைப்புலி மீண்டும் ராமசாமியின் தோட்டத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கொன்றது விவசாயிகளை பீதியடைய செய்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'தலைமை வன உயிரின வன காப்பாளரிடம் விரைவில் அனுமதி பெற்று கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணி நடைபெறும். ராமசாமியின் விவசாய தோட்டத்திலும் கண்காணிப்பு கேமராக்களை வைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்