கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை சாவு

பந்தலூர் அருகேகிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை இறந்தது.;

Update: 2023-01-27 18:45 GMT

பந்தலூர் 

பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே அம்புரோஸ் வளைவுகல்கடவு பகுதியில் 28 அடி ஆழமுள்ள குடிநீர் கிணறு தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இந்தநிலையில் நேற்று அந்த வழியாக நடமாடிய சிறுத்தை தவறி கிணற்றுக்குள் விழுந்தது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பார்த்த போது, கிணற்றுக்குள் சிறுத்தை உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர்கள் அய்யனார், சஞ்சீவி, வனவர் பெலிக்ஸ் ஜார்ஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏணி மூலம் சிறுத்தையை மீட்க முயன்றனர். ஆனால், அது முடியவில்லை. கூடலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தனர். அப்போது சிறுத்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து சிறுத்தை உடல் கயிறு கட்டி மீட்கப்பட்டது. பின்னர் கால்நடை டாக்டர்கள் ராஜேஷ்குமார், ராஜராஜன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இறந்தது 4 வயதான பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. பின்னர் சிறுத்தை உடல் அங்கே தீ வைத்து எரிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்