தன்னை விட நான்கு வயது குறைந்த கல்லூரி மாணவரை காதலித்து கரம்பிடித்த பேராசிரியை...!
தன்னை விட நான்கு வயது இளைய மாணவனைக் காதலித்து கரம் பிடித்தபெண் பேராசிரியை, பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் மீனா(28). பரமத்திவேலூரில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அதே கல்லூரியில் படித்து வரும் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள நல்லகுமாரன் பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் பிரவீன் (24) என்ற மாணவனுக்கும் அவருக்கும் காதல் மலர்ந்தது.
இதுகுறித்து அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தெரிந்த இருவரது வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்த 8-ம் தேதியன்று இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருவண்ணாமலைக்குச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் இருவரும் நேற்று தஞ்சம் அடைந்தனர். அதனையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பத்துக்கு வாழ வழி உள்ளதை எடுத்துக் கூறி, மாணவன் பிரவீன், அவரது பெற்றோர்களுடன் கல்லூரி விரிவுரையாளர் மீனாவை அனுப்பி வைத்தனர். மாணவனை காதலித்து விரிவுரையாளர் திருமணம் செய்து கொண்டுள்ள இச்சம்பவம் கல்லூரி வட்டாரத்திலும், அந்த பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.