தாமதமாக வந்த அரிய வகை பறவைகள்
நீலகிரியில் காலநிலை மாற்றம் காரணமாக அரிய வகை பறவைகள் தாமதமாக வந்து உள்ளன.
கோத்தகிரி,
நீலகிரியில் காலநிலை மாற்றம் காரணமாக அரிய வகை பறவைகள் தாமதமாக வந்து உள்ளன.
பனிக்காலம்
மேற்கு தொடர்ச்சி மலையில் நீலகிரி மாவட்டம் அமைந்து உள்ளது. உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ளதால், ஆண்டுதோறும் பனிக்காலத்தில் வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்ளூர் பறவைகள் வலசை பயணமாக நீலகிரியில் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. மேலும் அரியவகை பறவைகள் சில வாரங்கள் மரங்களில் தங்கி, இனப்பெருக்கம் செய்து விட்டு, பின்னர் திரும்பி செல்கின்றன.
தொடர் மழை மற்றும் உறைபனி பொழிவு குறைவு காரணமாக, பறவைகளின் வலசை பயணம் சற்று தாமதமாக தொடங்கி உள்ளது. ஊட்டி, கோடநாடு, குன்னூர், பர்லியார், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் இருந்து வலசை பாதை தொடங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கோத்தகிரி, கோடநாடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை ஆகிய இடங்களுக்கு வந்துள்ளன.
அரிய வகை பறவைகள்
குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், கோடநாடு காட்சி முனை, கோத்தகிரி லாங்வுட் சோலை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, பர்லியார், குன்னூர் டால்பின்ஸ் நோஸ் காட்சி முனை, கூடலூர் ஊசிமலை காட்சி முனை ஆகிய பகுதிகளுக்கு தாமதமாக பறவைகள் வந்துள்ளன.
நீலகிரியில் யுரோப்பியன் கிரீன் வுட் பெக்கர், ப்ளூ கேப்பிடூ ராக் திரஷ், லாங் கிரே பாபுலர், ஹிரோஷியன் வுட் பெக்கர், லாங் டைல் சிறைக், சினோரியஸ் டிட், ஒயிட் ஐ, கிரேட்டர் கோணிகர், வேக்டைல், இந்தியன் ரோலர், ரோஸ் ரிங் பேரகிட், இருவாச்சி ஆகிய அரிய வகை பறவைகள் தென்பட்டு உள்ளது. ஆனால், தற்போது அந்த பறவைகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.
காலநிலை மாற்றம்
இந்த பறவைகளை பறவைகள் ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து, புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் மதிமாறன் கூறும்போது, ஆண்டுதோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடு பறவைகள் இடம் பெயர்வு நடப்பாண்டில் தாமதமாகி உள்ளது. இதற்கு காலநிலை மாற்றம் காரணமாக உள்ளது.
உலகளாவிய பருவநிலை மாற்றத்தால் பறவைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதாக சர்வதேச ஆய்வுகளில் தெரியவருகிறது.
ஏற்கனவே குளங்கள், ஆறுகள் குறைந்து காணப்படும் நிலையில், தங்கள் வாழ்விடங்களை தொலைத்து இடம்பெயரும் பறவைகளின் தற்போதைய நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, மரங்களை வளர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, பருவநிலை மாற்றம் ஏற்படாமல் இருக்க அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.