மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய மீன்கள்

கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கியது. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். மீன்பிடி சீசன்

Update: 2022-12-03 18:45 GMT

வேதாரண்யம்:

கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கியது. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீன்பிடி சீசன்

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் மிக குறைந்த அளவே மீன்கள் பிடித்து வந்தனர். இதனால் மிகுந்த நஷ்டத்தை சந்தித்த மீனவர்கள், கூலிக்கு கூட மீன் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்து வந்தனர்.

அதிக அளவில் சிக்கிய மீன்கள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்,. நேற்று காலை கரை திரும்பினர்.

மீனவர்கள் வலையில் 4 டன் கிழங்கான் மீன்க, ஒரு டன் விலையுர்ந்த வாவல்மீன், நீலக்கால் நண்டு, புள்ளிநண்டு, இறால் மற்றும் 25-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள் கிடைத்தன. நேற்று மட்டும் ஒரே நாளில் 6 டன் மீன்கள் பிடிக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி

கிழங்கான்மீன் கிலோ ரூ.330-க்கும், வாவல் 700-க்கும், நீலக்கால் நண்டு 360-க்கும், புள்ளி நண்டு 160-க்கும், இறால் 500-க்கும் ஏலம் போனது. மீன்கள் அதிகம் கிடைத்ததாலும், நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கோடியக்கரையில் இருந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதும் அதிக அளவில் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவாக இருப்பதால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் இந்த நேரத்தில் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை என மீனவர்கள் ஆதங்கப்பட்டனர்.

-----

Tags:    

மேலும் செய்திகள்