ஆக்கிரமிப்புகளால் நிரம்பிய ஏரி

புதுப்பேட்டை அருகே ஆக்கிரமிப்புகளால் நிரம்பி இருந்த ஏரியில் தண்ணீரை அதிகளவில் தேக்க முடியாமல் போனதர்ல விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2022-12-18 18:53 GMT

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ளது மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமம். இங்கு ஏரி ஒன்று உள்ளது. சுமார் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியின் மூலம் அந்த பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலம் பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில் ஏரி பகுதியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். அதோடு ஏரியில் எஞ்சிய பகுதியும் தூர்ந்து போய் கிடக்கிறது.

இதற்கிடையே பருவமழைக்கு முன்பு, இந்த ஏரியை தூர்வார வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ஏரியில் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்த போதெல்லாம், ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியில் அளந்து காட்ட வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து தூர்வாரும் பணிக்கு முட்டுக்கட்டை போட்டனர். இதனால், அந்த பணியை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.

குறைந்த அளவில் தண்ணீர்

இதற்கிடையே பருவமழையும் தொடங்கிவிட்டது. இதனால் இந்த ஏரிக்கு தண்ணீர் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. ஏரியில் குறைந்த அளவில் தான் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதை கொண்டு விவசாய நிலங்களுக்கு முழுவதும் பாசனத்துக்கு கைக்கொடுக்காது என்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

புதுப்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் தண்ணீரால் நிரம்பிய நிலையில், இந்த ஏரி மட்டும் ஆக்கிரமிப்புகளால் தான் நிரம்பி வழிகிறது..

இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் மாவட்ட கலெக்டர் ஏரியை நேரில் ஆய்வு செய்து தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஏரியை சார்ந்துள்ள விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்