விபத்தில் சிக்கிய மகனுக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்களுடன் பெண் தர்ணா

விபத்தில் சிக்கிய மகனுக்கு இழப்பீடு வழங்கக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்களுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-26 16:04 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்தநிலையில் உறவினர்கள் 2 பேருடன் கலெக்டர் அலுவலகம் வந்த பெண் திடீரென்று கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த தென்கரையை சேர்ந்த சுதா என்று தெரியவந்தது. விசாரணையின் போது சுதா கூறுகையில், கடந்த 2013-ம் ஆண்டு என்னுடைய மகன் விக்னேஷ்வரன் வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியானார். இதனால் எனது மகனுக்கு இழப்பீடு கேட்டு தொழிலாளர் நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த கோர்ட்டு, வெல்டிங் பட்டறை உரிமையாளர் உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவிட்டு 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே உரிய இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும் என்றார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சுதா தனது உறவினர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை சமாதானப்படுத்திய போலீசார் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுப்பதுடன், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் இதுதொடர்பாக மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்