இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மாடு மேய்த்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி, எஸ்.டி. கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பொம்பூர் காலனி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண், கடந்த 29.5.2017 அன்று அதே கிராமத்தில் உள்ள ஒரு சவுக்கு தோப்பில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் மகன் சரவணன் என்ற துளசி (28) கூலித்தொழிலாளி, அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் அங்குள்ள சவுக்கு தோப்பில் இருந்து வெளியே ஓடி வந்தார். உடனே சரவணன், அந்த பெண்ணை திட்டி தாக்கியதோடு பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அந்த பெண் கூச்சல் போடவே அப்பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்த சரவணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ஆயுள் தண்டனை
பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சரவணன் மீது கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி. எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சரவணன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோதண்டபாணி ஆஜரானார்.