தலையில் கல்லைப்போட்டு கூலித்தொழிலாளி படுகொலை

பட்டிவீரன்பட்டி அருகே, தலையில் கல்லைப்போட்டு கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் உடலை வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-11 18:45 GMT

கூலித்தொழிலாளி மாயம்


திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 8-ந்தேதி காலை இவர், தனது நண்பர்களுடன் செல்வதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார்.


ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது அண்ணன் ராஜ்குமார், மாயமான தனது தம்பி ரத்தினகுமாரை பல்வேறு இடங்களில் தேடினார். இருப்பினும், ரத்தினகுமார் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.


இதுதொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் ராஜ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


திடுக்கிடும் தகவல்


போலீசார் நடத்திய விசாரணையில் அய்யங்கோட்டையை சேர்ந்த ரத்தினகுமாரின் நண்பர்களான விக்கி என்ற விக்னேஷ் (23), மைதிலிநாதன் (19), மதுரையை சேர்ந்த அபிகுமார் (20) உள்ளிட்ட 6 பேருடன் ரத்தினகுமார் சென்றது தெரியவந்தது.


இதனையடுத்து விக்னேஷ், மைதிலிநாதன், அபிகுமார் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது 6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து, பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் ரத்தினகுமாரை அழைத்து சென்றுள்ளனர்.


பின்னர் அங்கு வைத்து ரத்தினகுமாரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாகவும், அதன்பிறகு புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் உடலை வீசி விட்டதாகவும் அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் 3 பேரும் தெரிவித்தனர்.


இதைத்தொடர்ந்து விக்னேஷ், மைதிலிநாதன், அபிகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை, புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.


800 அடி பள்ளத்தில் உடல் மீட்பு


இந்தநிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில், தீயணைப்பு படையினர் உதவியுடன் ரத்தினகுமாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நடந்த தேடுதல் வேட்டையில் ரத்தினகுமார் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

2-வது நாளாக நேற்று கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் மற்றும் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு படைவீரர்கள் தேடினர்.

அப்போது ரத்தினகுமாரின் உடல், புல்லாவெளி நீர்வீழ்ச்சியின் 3-வது அருவி பகுதியான 800 அடி பள்ளத்தில் கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய உடலை, தீயணைப்பு படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கஞ்சா விற்பனை


இதற்கிடையே கைது செய்யப்பட்ட விக்னேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


நான், தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் கஞ்சா வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கினேன். ஆனால், நான் கூறியபடி அவருக்கு கஞ்சா வாங்கி கொடுக்க முடியவில்லை. இதனால் அந்த நபர், என்னிடம் பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் நான் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.


இந்தநிலையில் என்னிடம் பணம் கொடுத்த நபர், எனது நண்பரான ரத்தினகுமாரிடம் என்னைப்பற்றி விசாரித்து இருக்கிறார். அதற்கு, நான் கஞ்சா வாங்கி கொடுக்க மாட்டேன் என்றும், என்னை பற்றி அவதூறாகவும் ரத்தினகுமார் அவரிடம் கூறி இருக்கிறார். இது, எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.


புல்லாவெளி நீர்வீழ்ச்சி


இதுதொடர்பாக ரத்தினகுமாரிடம் சென்று நான் கேட்டேன். இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஆனது. என்னைப்பற்றி அவதூறாக கூறிய ரத்தினகுமாரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். இதுபற்றி என்னுடைய நண்பர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.


எங்களது திட்டப்படி, பெரும்பாறை வனப்பகுதியில் உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்று ரத்தினகுமாரை கொலை செய்ய முடிவு செய்தோம். அதன்படி சம்பவத்தன்று, உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று ரத்தினகுமாரை நான் அழைத்தேன். அவரும் எனது பேச்சை நம்பி, என்னுடன் வந்து விட்டார்.


அதன்பிறகு ரத்தினகுமார் உள்பட 7 பேரும், 3 மோட்டார் சைக்கிள்களில் புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றோம். அங்கு வைத்து, தன்னை அவதூறாக பேசியது தொடர்பாக ரத்தினகுமாரிடம் கேட்டேன்.


தலையில் கல்லைப்போட்டு...


அப்போது ஏற்பட்ட தகராறில், நான் உள்பட 6 பேரும் சேர்ந்து ரத்தினகுமாரின் தலையில் கல்லை தூக்கிப்போட்டோம். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து செத்தார்.


பின்னர் அவரது உடலை, அபாயகரமான பள்ளத்தாக்கு பகுதியான புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தூக்கி போட்டு விட்டு வந்து விட்டோம். அதன்பிறகு எதுவும் தெரியாதது போல ஊரில் சுற்றித்திரிந்தோம். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி, துப்புத்துலக்கி எங்களை கைது செய்து விட்டனர்.


இவ்வாறு விக்னேஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


3 பேருக்கு வலைவீச்சு


இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதத்தில் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டிவீரன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்