அரை கிராம் தங்க மூக்குத்திக்கு நண்பரின் தாயை கழுத்தை நெரித்துக்கொன்ற தொழிலாளி

அரை கிராம் தங்க மூக்குத்திக்கு ஆசைப்பட்டு நண்பரின் தாயை கழுத்தை நெரித்துக்கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-29 07:21 GMT

பேரம்பாக்கம்,

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 85). இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவருக்கு பங்காரு, முருகன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் முருகன் திருநின்றவூரில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பங்காருவுடன் அவரது தாயார் லட்சுமி வசித்து வருகிறார்.

மகன் பங்காரு ஒரு வீட்டிலும், அவரது தாயார் லட்சுமி, பக்கத்தில் உள்ள மற்றொரு வீட்டிலும் தங்கி வந்தனர். இந்த நிலையில் முருகனுக்கு உப்பரபாளையம், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான அசோக்குமார் (36) என்பவருடன் நட்பு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி ஒன்றாக சுற்றி வந்தார். முருகனின் தம்பி பங்காருவுடமும் பழகி வந்தார்.

அசோக்குமாருக்கு திருமணமாகி மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசோக்குமாரும், மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்கள்.

அசோக்குமார் தனது தாயாருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 26-ந் தேதியன்று இரவு லட்சுமி தனது மகன் பங்காரு உடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் அவர் உறங்கச் சென்றார். அப்போது லட்சுமியுடன் முருகனின் நண்பரான அசோக்குமார் என்பவரும் உடன் தங்கினார்.

இந்த நிலையில் மறுநாள் காலையில் பார்த்தபோது லட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மூக்கில் அணிந்திருந்த ஒரு பக்க தங்க மூக்குத்தியும் திருடு போனது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மூத்த மகன் பங்காரு தன் தாய் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுசம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், திருவள்ளூர் ஏ.எஸ்.பி.விவேகானந்தா சுக்லா தலைமையில், மப்பேடு இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இறந்த லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்து அவரது சாவு குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அசோக்குமாரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்ததால் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக கூறினார்.

பின்னர் போலீசார் அவரை விசாரித்த போது அவர் மூதாட்டியை கொலை செய்தது ஒப்புக்கொண்டார்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,

சம்பவ தினத்தன்று நான் என் வீட்டுக்கு செல்லாமல் முருகனின் தாயார் லட்சுமி வீட்டில் தங்கினோம். அப்போது நான் மது அருந்தி இருந்தேன். அச்சமயம் லட்சுமி கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது, லட்சுமியின் மூக்கில் இருந்த தங்க மூக்குத்தியை திருட முயற்சி செய்தேன். இதை தொடர்ந்து அவரது மூக்கில் கை வைத்து நகையை கழட்டினேன். இதை அறிந்த அவர் எழுந்து என்னை திட்டி சத்தம் போட்டார். இதனால் பயந்து போன நான் அவரது வாயை மூடி கழுத்தை நெரித்தேன்.

பின்னர் அவரது வாயைத் துணியால் அடைத்து, முகத்தில் தலையணையைக் கொண்டு அமுக்கி கொலை செய்துவிட்டு அவரது மூக்கில் ஒரு பகுதியில் இருந்த அரை கிராம் தங்க மூக்குத்தி திருடி சென்று விட்டேன்.

ஆனால் போலீசார் எப்படியே என்னை கண்டுபிடித்து கைது செய்தனர் என தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் அவர் மறைத்து வைத்த தங்க மூக்குத்தியை மீட்டு அவரிடம் இது சம்பந்தமாக தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அரை கிராம் தங்க மூக்குத்திக்காக நண்பரின் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் புதுப்பட்டு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்