ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை

வத்தலக்குண்டு மார்க்கெட்டில், ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை போட்டிப்போட்டு பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

Update: 2023-08-03 16:25 GMT

ஏழைகளின் எட்டாக்கனி

சைவம், அசைவம் என எந்த உணவு தயாரிப்பதாக இருந்தாலும் முதன்மையான இடத்தை பிடிப்பது தக்காளியும், வெங்காயமும் தான். சமையலில் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் என்று இவற்றை அழைக்கலாம்.

சமீபகாலமாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. சதம் அடித்த வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

ஆனால் தக்காளி விலையோ, கேட்டவுடன் தலை சுற்றும் அளவுக்கு உயர்ந்து கொண்டே இருந்தது. பணக்காரர்கள் கூட வாங்க தயங்கும் அளவுக்கு தக்காளி விலை இரட்டை சதம் அடித்தது. ஏழைகளின் எட்டாக்கனியாகி விட்டது.

தற்காலிகமாக தள்ளிவைப்பு

சதம் அடித்து இல்லத்தரசிகளை வதம் செய்த தக்காளியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தக்காளியை சமையலில் இருந்து தற்காலிகமாக தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டது.

எகிறி வரும் தக்காளி விலை எப்போது குறையும் என்ற ஏக்கம் எல்லோருடைய மனதிலும் இருந்து வருகிறது. குறைந்த விலையில் தக்காளி கிடைத்தால் அங்கு கூட்டம் அலைமோதுவது வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தக்காளி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ரூ.70-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கிலோ ரூ.120-க்கு விற்ற தக்காளி திடீரென வீழ்ச்சியை சந்தித்தது. ஒரே நாளில் ரூ.50 விலை குறைந்தது.

2½ டன் வரத்து

பல நாட்களாக தக்காளி வாங்க முடியாமல் தவித்த இல்லத்தரசிகளுக்கு, இந்த விலை வீழ்ச்சி அதிர்ஷ்டம் அடித்தது போல இருந்தது. இதனால் மார்க்கெட்டில் காலையில் இருந்தே கூட்டம் அலைமோதியது.

தங்களுக்கு தேவையான தக்காளியை போட்டிப்போட்டு பொதுமக்கள் வாங்கி சென்றனர். சிலர் 5 கிலோ வரை தக்காளியை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. வழக்கமாக, வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு 1½ டன் தக்காளி வரத்து இருக்கும்.

ஆனால் நேற்று ஒரே நாளில் 2½ டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைவித்த தக்காளியை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர்.

தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்த விலை வீழ்ச்சி நீடிக்குமா? அல்லது மீண்டும் விஷம் போல் விலை ஏறுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்