ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை

குடும்ப தலைவிகளை தவிக்க வைக்கும் விதமாக ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது.

Update: 2023-07-02 21:06 GMT

குடும்ப தலைவிகளை தவிக்க வைக்கும் விதமாக ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது.

சதம் அடித்த தக்காளி

உணவு சமைப்பதற்கு தக்காளி இன்றியமையாத ஒன்று. இதனால் தினமும் உணவு சமைப்பதற்கு தக்காளி பயன்படுத்தப்படுவதால் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. விளைச்சல் அதிகமாக இருக்கும்போது தக்காளியின் விலை குறைவாக இருக்கும். விளைச்சல் குறையும்போது மார்க்கெட்டுக்கு வரத்தும் குறைந்துவிடுவதால் விலையில் ஏற்றம் ஏற்படுகிறது.

ஒரு கிலோ ரூ.60 வரை உயரும்போது நடுத்தர மக்களுக்கு பெரும் அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் தக்காளியின் விலை சதம் அடித்தது இல்லத்தரசிகளின் மத்தியில் தவிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.30 வரை மட்டுமே குறைந்தது.

விலை உயர்வு

இந்தநிலையில் ஈரோட்டில் தக்காளியின் விலை மீண்டும் உயர்ந்து இருப்பது இல்லத்தரசிகளை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம் விளைச்சல் குறைந்ததால் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து உள்ளது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையை கேட்டதும் பலர் தக்காளியை வேண்டாம் என்று சொல்லிவிட்டு விலை குறைந்த பிறகு வாங்கிகொள்ளலாம் என்று திரும்பினர். மேலும் பலர் கால், அரை கிலோ என்று வாங்கி சென்றனர். கிலோ கணக்கில் வாங்கி சென்றவர்கள் குறைந்த அளவில் மட்டுமே தக்காளியை வாங்குகின்றனர். ஓட்டல், திருமணம் போன்ற விழா ஏற்பாடு செய்தவர்கள் மட்டுமே தேவையான தக்காளியை மொத்தமாக வாங்கினர். பல்வேறு ஓட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி போன்றவை போடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

வரத்து குறைந்தது

இதுகுறித்து தக்காளி வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

ஈரோடு மார்க்கெட்டுக்கு தாளவாடி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு தினமும் 10 ஆயிரம் பெட்டிகள் தக்காளி கொண்டு வரப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்தது. இதனால் சுமார் 2 ஆயிரத்து 500 பெட்டிகள் மட்டுமே கொண்டு வரப்பட்டன. எனவே வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. 26 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ஒன்று மொத்த விலையில் ரூ.2 ஆயிரத்து 400-க்கும், 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1,200 முதல் ரூ.1,400 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்