நாகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை

நாகையில் கிடு, கிடுவென விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2023-06-26 18:45 GMT

நாகையில் கிடு, கிடுவென விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தக்காளி விலை உயர்வு

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுவது தக்காளி. தக்காளி இன்றி எந்த உணவு பொருளும் சமைக்க முடியாது. இதனால் உணவு ெபாருட்கள் தயாரிக்க தக்காளி அத்தியாவசியமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கிடு,கிடுவென உயர்ந்து விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் தங்கத்தைப் போல தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நாகைக்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் மார்க்கெட்டில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. நாகையில் தக்காளி விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான கடைகளில் குறைந்த அளவு தக்காளியே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

அத்தியாவசிய பொருளாக தக்காளியின் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கி வீட்டில் இருப்பு வைத்திருக்கும் இல்லத்தரசிகள், தற்போது ¼ கிலோ, ½ கிலோ வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து நாகை மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட துணைச் செயலாளரும், காய்கறி கடைக்காரருமான ரஜினிகாந்த் கூறுகையில், கடந்த பல மாதங்களாக தக்காளிக்கு நல்ல விலை கிடையாது. அதிக விளைச்சல் காரணமாக விலை குறைந்தது காணப்பட்டது. இதன் காரணமாக தக்காளியை பயிரிட்டு நஷ்டத்தை சந்திக்க முடியாது என்று விவசாயிகள் தக்காளி சாகுபடியை கைவிட்டனர். இதனால் தற்போது வரத்துகுறைந்தது தக்காளி விலை அதிகரித்துள்ளது.

கிலோ ரூ.100-க்கு விற்பனை

நாகையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரை விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.. தக்காளியை மொத்தமாக வாங்கி வைத்து விற்பனை செய்ய முடியாது. திடீரென விலை குறைந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதற்காக குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்கி விற்பனை செய்கிறோம்.

சராசரியாக ஒரு காய்கறி கடைக்கு 60 பெட்டி தக்காளி விற்பனைக்காக வாங்குகிறார்கள் என்றால், தற்போது விலை ஏற்றம் காரணமாக 30 பெட்டிகள் மட்டுமே வாங்குகிறோம். தக்காளியைப் போலவே கடந்த வாரம் ரூ.30-க்கு விற்ற பச்சை மிளகாய் தற்போது ரூ.75- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ரூ.30-க்கு விற்கப்பட்ட கொத்தமல்லி கட்டு ரூ.80-க்கு விற்பனை செய்யபடுகிறது என்றார்..

Tags:    

மேலும் செய்திகள்