பாடகி பாலியல் குற்றச்சாட்டு: வைரமுத்துவிற்கு ஒரு நியாயம்? பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு ஒரு நியாமா? அண்ணாமலை கேள்வி
வைரமுத்து மீது பாடகி வெளியிட்ட பாலியல் குற்றச்சாட்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பிராண்ட் இந்தியாவாக இருக்க கூடிய பிரதமரை வைத்து முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். வெளிநாடுகளில் பிரதமர் நரேந்திரமோடிக்கு பிராண்ட் உள்ளது. முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலினுக்கு பிராண்ட் இல்லை.
உலகளவில் தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் நாடு இந்தியா தான், காரணம் பிரதமர் மோடி. முதல்வர் என்ன மாதிரியான தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.
ஜனவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து சென்றனர்.
வைரமுத்து மீது பாடகி வெளியிட்ட பாலியல் குற்றச்சாட்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? வைரமுத்துவுக்கு ஒரு நியாயம்? பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு ஒரு நியாயமா? பிரிட்ஜ் பூஷன் பூஷன் சிங் மீது புகார் கூறிய மல்யுத்த வீரர்கள் தகுந்த ஆதாரங்களை வழங்க வேண்டும்.
டெல்லியில் போராடும் விளையாட்டு வீராங்கனைகள் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கும்போதே பிரிஜ் பூசன் சரண் சிங்-ஐ கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர். விளையாட்டு வீராங்கனைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு மீதே நம்பிக்கை இல்லை என்றால் யாரை நம்புவார்கள் என தெரியவில்லை.
தவறு ஏதும் செய்யாமல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்பட்டுள்ளது. சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்குவது சரியா?
மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் - மாநில அரசு விரைந்து குறைகளை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.