மழைக்கு இடிந்து விழுந்த தொகுப்பு வீடு
திண்டுக்கல் அருகே மழைக்கு தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது.
திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டி ஊராட்சி இந்திரா காலனியில் 20 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. அதில் ஒரு வீட்டில் கூலித்தொழிலாளியான ராஜ் (வயது 60) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் பலத்தமழை பெய்தது. இதில் அவருடைய வீட்டில் மழைநீர் ஒழுக தொடங்கியது. இதனால் பக்கத்து வீட்டுக்கு ராஜ் தனது குடும்பத்தினருடன் சென்று தங்கினார். நள்ளிரவில் ராஜ் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. நல்லவேளையாக தண்ணீர் ஒழுக தொடங்கியதுமே பக்கத்து வீட்டுக்கு சென்றுவிட்டதால் ராஜூம் அவருடைய குடும்பத்தினரும் உயிர் தப்பினர். வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள், 3 சைக்கிள்கள், 2 சிலிண்டர், டி.வி.பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி நாசமாகின. இது குறித்து தகவல் அறிந்த பள்ளபட்டி ஊராட்சி தலைவர் பரமன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சேதமான தொகுப்பு வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.