உயர்மட்டக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்

என்.எல்.சி.யால் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர்மட்டக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Update: 2023-07-30 18:45 GMT

சேத்தியாத்தோப்பு

வளையமாதேவிக்கு செல்ல அனுமதி மறுப்பு

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று சென்னையில் இருந்து காரில் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து, என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி கிராமத்தில் பயிர்கள் அழிக்கப்பட்ட பகுதியை பார்வையிட செல்ல முயன்றார்.

இதையறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையிலான போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார், நீங்கள் வளையமாதேவிக்கு சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே அங்கு செல்ல அனுமதி கிடையாது என்றனர். இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை

விவசாயிகளுக்கு என்.எல்.சி. நிறுவனம் ஒப்புக்கொண்டபடி இழப்பீடு தொகை வழங்கவில்லை. பயிர்கள் அழிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த பேரழிவை என்.எல்.சி. நிர்வாகத்தால் கடலூர் மாவட்டம் சந்தித்திருக்கிறது.

தற்போது என்.எல்.சி.யை வெளியேற்ற வேண்டும் என்ற இறுதிக்கட்ட போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு காவல்துறையை வைத்துக்கொண்டு விவசாயிகளை வஞ்சிக்கிறது. வழக்கு போட்டும் மிரட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உயர்மட்டக்குழு அமைக்க...

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். கிராமங்கள் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தற்போது சுரங்க பணிகள் நடந்து வருகிறது. நிலத்தை பிடுங்காதே, வாழ்வாதாரத்தை அழிக்காதே என மக்கள் கதறுகிறார்கள். பேரழிவை ஏற்படுத்தும் என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் தலைமையில், வேளாண்மைத்துறை, நீர்பாசனத்துறை, சுற்றுச்சூழல்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து, அதனை என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பி விவசாயிகளிடம் கருத்து கேட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

போராட்டம்

ஏற்கனவே என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் உரிய இழப்பீடு கேட்டு போராடி கொண்டிருக்கிறார்கள். எனவே முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தி, ஆய்வு அறிக்கை தயாரித்து அதன் அடிப்படையில் என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். சுரங்கத்திற்கு வடிகால் வசதி இல்லாததால், அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்