பூதப்பாண்டி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னையை நாசம் செய்த யானை கூட்டம்

பூதப்பாண்டி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னையை யானை கூட்டம் நாசம் செய்தது. அந்த யானை கூட்டத்தை விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-05-10 18:34 GMT

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னையை யானை கூட்டம் நாசம் செய்தது. அந்த யானை கூட்டத்தை விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யானை கூட்டம்

பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி உடையார்கோணம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது. இந்த பகுதியில் ரப்பர் மரம், வாழை மரம், தென்னை மரம் மற்றும் ஏராளமான பயிர்களை பயிரிட்டிருந்தனர்.

இங்கு தெள்ளாந்தி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 6 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை மரம் மற்றும் பயிர்களை பயிரிட்டிருந்தார். இதேபோல் தக்கலை பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரும் 8½ ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வனப்பகுதியை விட்டு யானை கூட்டம் வெளியேறி இந்த மலையடிவார பகுதிக்கு வந்தது. அங்கு வாழை, தென்னை மரங்களை நாசம் செய்து அந்த பகுதியை சுற்றி வருகிறது. 30 வாழை மரம், 30 தென்னை மரத்தை அந்த யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

அட்டகாசம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மணிகண்டன் கூறுகையில், இந்த பகுதியில் கடந்த வருடம் ஏற்கனவே யானை கூட்டம் பயிர்களை நாசம் செய்தது. தற்போது 2-வது முறையாக இங்கு வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் இந்த யானை கூட்டத்தை விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், யானை கூட்டம் இந்த பகுதிக்கு வராமல் இருப்பதற்காக தோவாளை கால்வாயின் மேல்பகுதியில் உள்ள பாலத்தில் தடுப்பு சுவர் கட்டியுள்ளோம். அந்த தடுப்பு சுவரை இடித்து தள்ளி விட்டு பாலத்தின் வழியாக விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது. இந்த பகுதிக்கு யானைகள் வராமல் இருக்க பட்டாசு வெடித்து விரட்டப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்