கடலூர் தென்பெண்ணையாற்றில் சிறுவர்கள் விரித்த வலையில் சிக்கிய கைத்துப்பாக்கி

கடலூர் தென்பெண்ணையாற்றில் சிறுவர்கள் விரித்த வலையில் கைத்துப்பாக்கி சிக்கியது. அதை தடயவியல் சோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-08-06 21:35 GMT

கடலூர்,

கடலூர் ஆல்பேட்டை வழியாக தென்பெண்ணையாறு ஓடுகிறது. இந்த பாலத்திற்கு அருகிலேயே தற்போது புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பாலத்திற்கு கீழ் நேற்று மதியம் புதுச்சேரி கும்தாமேடு பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள், சிறிய வலைவிரித்து மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆற்றில் வலை விரித்து வெளியே இழுத்த போது, அந்த வலைக்குள் கைத்துப்பாக்கி ஒன்று சிக்கியது.

இதை கையில் எடுத்து அவர்கள் பார்த்த போது, அந்த கைத்துப்பாக்கி துருப்பிடித்த நிலையில் இயக்க முடியாதபடி இருந்தது. இருப்பினும் அதை வைத்து அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். இதை அங்கிருந்த காவலாளி ஒருவர் வாங்கி போலீசில் ஒப்படைத்து விடுவதாக கூறினார். ஆனால் சிறுவர்கள் நாங்களே போலீசில் கொடுத்து விடுவதாக கூறி அதை எடுத்துச்சென்றனர்.

போலீசார் கைப்பற்றி விசாரணை

இதையடுத்து அவர்கள் 2 பேரும் நடந்து சென்று, கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசாரிடம், அந்த கைத்துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு, அது கிடைத்த விவரத்தையும் கூறி விட்டு சென்று விட்டனர்.

இதை கைப்பற்றிய போலீசார், இது பற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கைத்துப்பாக்கியை பார்வையிட்டனர். அப்போது, அது ஏர் பிஸ்டல் வகை துப்பாக்கி என்று தெரியவந்தது. இந்த வகை துப்பாக்கி பலூன் சுடுவதற்கும், துப்பாக்கி சுடும் பயிற்சிக்காகவும் பயன்படுத்துவதும் தெரிந்தது.

வழக்குப்பதிவு

இருப்பினும் அந்த துப்பாக்கியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். அதன்பிறகு அதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் ரெட்டிச்சாவடி போலீசாரை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கைத்துப்பாக்கியை யார் பயன்படுத்தியது, அதை ஆற்றில் வீசி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த துப்பாக்கியை வருவாய்த்துறையினர் பரிந்துரையின் பேரில் தடயவியல் சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்