போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மகளிர் குழுவினர்
கோவில்பட்டியில் போலீஸ் நிலையத்தை களிர் குழுவினர் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தை, இலுப்பையூரணி கிராமம் அனைத்து மகளிர் திட்டம் மகளிர் குழு தலைவி தமிழ்செல்வி தலைமையில் மகளிர் குழு உறுப்பினர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவரிடம் தமிழ்ச்செல்வி கொடுத்த மனுவில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி மன்றத்தில் மகளிர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் மகளிர் திட்டம் சம்பந்தமான வேலையின் அறிக்கையை சமர்ப்பிக்க தினசரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டமாக கூடி திட்ட அறிக்கை பற்றி விவாதம் நடைபெறுவது வழக்கம். அப்போது தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை தெற்கு திட்டங்குளம் மகளிர் குழு கூட்டமைப்பு தலைவியாக நியமிக்க வலியுறுத்தி அவதூறாக பேசுகிறார். மேலும் என்னை கீழே தள்ளி கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.