சோகத்திலும் பெரும் சோகம்: மகள் கொல்லப்பட்ட துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை
கல்லூரி மாணவி ரெயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட நிலையில் துக்கம் தாங்காமல் மாணவியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
சென்னை,
சென்னையை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த மாணிக்கம்-ராமலட்சுமி தம்பதியின் மூத்த மகள் சத்யா (வயது 20). இவர், காதல் விவகாரத்தில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயிலுக்குள் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
மகிழ்ச்சியோடு கல்லூரி சென்ற மகள் ரெயிலுக்குள் தள்ளி கொலை செய்யப்பட்டு தலை துண்டான நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கதறி துடித்தனர். சத்யாவின் தந்தை மாணிக்கம், 'சத்யா... சத்யா...' என கதறியபடி என்ன செய்வதென்று தெரியாமல் மார்பிலும், தலையிலும் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டார்.
மகளோடு நானும் செல்கிறேன்
அவருக்கு உறவினர்கள் ஆறுதல் தெரிவித்த போதும், 'அன்பு மகள் என்னை விட்டு போய் விட்டாளே... இனி நான் இந்த உலகில் இருந்து என்ன செய்ய போகிறேன்' என மனம் நொந்தபடி பேசி வந்தார். மகளின் இழப்பை நினைத்து மனம் வருந்தியபடி இருந்த அவர், ஒரு கட்டத்தில் மகளோடு நானும் சென்று விடுகிறேன் என பேசி வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு அவர் யாருக்கும் தெரியாமல் மதுவுடன் விஷத்தை கலந்து குடித்தார். இதன்பின்பு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
விஷம் குடித்து தற்கொலை
அப்போது அவரது உறவினர்கள் துக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்து விட்டதாக கருதி அவரது முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப முயன்றனர். ஆனால், அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்து வந்தார். இதையடுத்து உறவினர்கள் உடனடியாக மாணிக்கத்தை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் மதுவுடன் விஷம் அருந்தி இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்த உறவினர்கள் கதறினர். பரிசோதனை முடிவில், மாணிக்கம் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
சத்யா கொலையால் அதிர்ச்சியில் இருந்த உறவினர்களுக்கு மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சத்யா கொலையான சில மணி நேரங்களில் மாணிக்கமும் இறந்துபோனது அவர்களது உறவினர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.
பிரேத பரிசோதனை
இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக சத்தியப்பிரியாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பிணவறைக்கு மாணிக்கத்தின் உடலும் எடுத்து செல்லப்பட்டது.நேற்று பகல் 12 மணிக்கு இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர், உறவினர்களிடம் அவர்களது உடல் ஒப்படைக்கப்பட்டது.
மிகுந்த சோகம்
அங்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், கூடுதல் போலீஸ் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் தீபக் சபேஷ், மகேந்திரன் உள்ளிட்ட மாணிக்கத்தின் உறவினர்கள் மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து உறவினர்கள் முன்னிலையில் இறுதிச்சடங்கு நடந்தது. இதன்பின்பு ஆலந்தூர் கண்ணன் காலனி பகுதியில் மின்மயானத்தில் இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டன.
ஒரே நேரத்தில் தந்தை-மகள் உயிரிழந்தது, அவர்களது இறுதிச்சடங்கு ஒரே நேரத்தில் நடந்தது போன்றவை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.