200 ஏக்கர் திடலில் பிரமாண்ட பந்தல்

விருதுநகரில் வருகிற 15-ந் தேதி நடைெபறும் தி.மு.க. முப்பெரும் விழாவிற்காக 200 ஏக்கர் திடலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-09-11 18:31 GMT

விருதுநகரில் வருகிற 15-ந் தேதி நடைெபறும் தி.மு.க. முப்பெரும் விழாவிற்காக 200 ஏக்கர் திடலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

முப்பெரும் விழா

விருதுநகர்-சாத்தூர் இடையே பட்டம்புதூரில் வருகிற 15-ந் தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

அங்கு நடைபெறும் விழா ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

விருதுநகர் பட்டம்புதூர் அண்ணா நகரில் அமைந்துள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பிலான கலைஞர் திடலில் வருகிற 15-ந் தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார்.

பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை ரா.மோகனுக்கும், கலைஞர் விருது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் விருது புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுவுக்கும், பேராசிரியர் விருது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு பண முடிப்பும், சான்றிதழும் வழங்கப்படும்.

கடிதத்தொகுப்பு

விழா நடைபெறும் பிரமாண்ட பந்தலுக்கு பிரதான முகப்பாக பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய 3 பேரின் உருவப்படங்களுடன் மலை முகடு போன்றும் அமைக்கப்படுகிறது. இதனையடுத்து விழாப்பந்தல் நுழைவுவாயில் மாளிகை போன்று அமைகிறது. பிரமாண்ட பந்தலில் 50 ஆயிரம் பேர் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 1 லட்சம் பேர் நிகழ்ச்சியை காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி, விழாவில் கலந்து கொள்வோருக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் கலைஞர் கருணாநிதியின் கடிதத்தொகுப்பு 54 புத்தகங்களாக வெளியிடப்படுகிறது.

முதல்-அமைச்சருக்கு நன்றி

விழா மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி மாலை 4 மணி அளவில் வர உள்ளார். கொரோனா தொற்று குறைந்த பிறகு வெளிமாவட்டத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியாக இந்த முப்பெரும் விழா உள்ள நடைபெற உள்ள நிலையில் இதை நடத்துவதற்கான வாய்ப்பை முதல்-அமைச்சர் இம்மாவட்ட கழகத்திற்கு தந்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட தி.மு.க. செய்து வருகிறது.

பிரமாண்ட அளவில் நடைபெறும் இந்த விழா பந்தல் மற்றும் முகப்புகளை காண்பதற்கு சுற்றி உள்ள கிராம மக்கள் வந்து செல்கின்றனர். முப்பெரும் விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து திரளாக மக்கள் கலந்து கொண்டு முதல்-அமைச்சரின் சிறப்புரையை கேட்க அழைக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்