கருப்பூர் அருகே பரபரப்பு கல்லூரி மாணவருடன் குடும்பம் நடத்திய பட்டதாரி பெண் கைது 3 மாத கர்ப்பமாக இருப்பதால் பெற்றோர் அதிர்ச்சி

கருப்பூர் அருகே கல்லூரி மாணவருடன் குடும்பம் நடத்திய பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார். அவர், 3 மாத கர்ப்பமாக இருப்பதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-10-11 21:19 GMT

கருப்பூர், 

கல்லூரி மாணவர்

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரிக்கு சென்ற மாணவரை திடீரென காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் கருப்பூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மாணவரின் பெற்றோர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

அதிர்ச்சி தகவல்

கோர்ட்டு உத்தரவின் பேரில் மாணவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். அப்போது, கல்லூரி மாணவருடன் யார், யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டது. மாணவர், 20 வயது பெண் ஒருவருடன் பழக்கத்தில் இருந்ததும் தெரிய வந்தது. அந்த பட்டதாரி பெண்ணும் மாயமாகி இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் கல்லூரி மாணவரும், அந்த பெண்ணும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

செல்போன் பழக்கம்

உடனே போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு சென்றனர். அங்கு, மாணவருடன், அந்த பெண்ணும் இருந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இந்த பழக்கத்தால் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் அந்த பெண் போலீசாரிடம் கூறியுள்ளார்.

பெற்றோர் அதிர்ச்சி

மேலும் அந்த மாணவனையும், இளம்பெண்ணையும் போலீசார் கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இருவரது பெற்றோரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் கல்லூரி மாணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோருடன் அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையே அந்த பெண் தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதைக்கேட்டு பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே17 வயது சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்தியதாக இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்