பட்டதாரி பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலம்

பட்டதாரி பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலம்

Update: 2022-12-08 19:35 GMT

தஞ்சை அருகே வாய்க்காலில் பிணமாக கிடந்த பட்டதாரி பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆத்திரத்தில் கொலை செய்த பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாய்க்காலில் இளம் பெண் பிணம்

தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு பகுதியில் செல்லும் வடசேரி பாசன வாய்க்கால் தலைப்பில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக நேற்று முன்தினம் தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வாய்க்காலில் பிணமாக கிடந்த இளம்பெண் தஞ்சை மாவட்டம் மேலஉளூர் தெற்குதெருவை சேர்ந்த அகல்யா(வயது 26) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

பட்டதாரி

இவர் கல்லுாரி படிப்பை முடித்து விட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்விற்காக தஞ்சையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் படிப்பதற்காக தினமும் மேலஉளூரில் இருந்து தனியார் பஸ்சில் வந்து சென்றார். வழக்கம்போல் கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அகல்யா வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் பல இடங்களிலும் அகல்யாவை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மாயமானதாக தேடப்பட்ட அகல்யா பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அகல்யா வடசேரி பாசன வாய்க்கால் பகுதிக்கு எப்படி வந்தார்? அவரை கொலை செய்து வீசியது யார்? என போலீசார் விசாரணை நடத்தினர்.

காதல்

அகல்யாவின் செல்போன் எண்ணை வைத்து அவருக்கு வந்த அழைப்புகளை போலீசார் சோதனை செய்தனர். இதில் தஞ்சை ஞானம் நகரை சேர்ந்த நாகராஜ்(25) என்பவர், அகல்யாவின் செல்போன் எண்ணை கடைசியாக தொடர்பு கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று நாகராஜை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ் தஞ்சை-பட்டுக்கோட்டை இடையே செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் இவருக்கு மேலஉளூரில் இருந்து தினமும் தஞ்சைக்கு வரும் அகல்யாவுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர்.

திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொலை

மேலும் அடிக்கடி இருவரும் வெளியில் சுற்றி வந்தனர். அப்போது நாகராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என அகல்யாவிற்கு தெரிய வந்தது. இருப்பினும் தன்னையும் திருமணம் செய்துகொள்ளக் கூறி வற்புறுத்தினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி அகல்யாவை காரில் அழைத்து சென்ற நாகராஜ் புதுக்கோட்டை சாலை பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து துப்பட்டாவால் அகல்யாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் காரில் அவரது உடலை ஏற்றி கொண்டு வந்து அன்று இரவே வாய்க்காலில் வீசி விட்டு சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கைது

இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்