கலையரங்கத்தில் செயல்படும் அரசு பள்ளிக்கூடம்
சிவகாசியில் கலையரங்கத்தில் செயல்படும் அரசு பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
சிவகாசி,
சிவகாசியில் கலையரங்கத்தில் செயல்படும் அரசு பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முயற்சியால் அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்தனர். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகள் வரை இங்கு பாடம் எடுக்கப்பட்டது. 2 ஆசிரியைகள் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் இந்த பள்ளிக்கு என கட்டிடம் இல்லாத நிலையில் அதே பகுதியில் உள்ள கலையரங்கில் தற்காலிகமாக தொடங்கப்பட்டது.
அடிப்படை வசதி
அதன் பின்னர் பள்ளிக்கு கட்டிடம் கட்ட இடம் மற்றும் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் மாணவர்கள் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத கலையரங்கத்தில் அமர்ந்து பாடம் படித்து வருகிறார்கள்.
ஆசிரியைகளுக்கு ஓய்வறை, கழிவறை எதுவும் கிடையாது. இதனால் இங்கு பணியாற்றி வரும் ஆசிரியைகளும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்து ஆசிரியைகள், மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்யவில்லையென்றால் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.