தந்தை-மகன் உள்பட 4 பேர் பலி

நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதிய அரசு விரைவு பஸ் தாறுமாறாக ஓடி ஸ்கூட்டர் மீதும் மோதியது. இந்த விபத்தில் தந்தை-மகன் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2023-05-12 18:45 GMT

சீர்காழி:

நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதிய அரசு விரைவு பஸ் தாறுமாறாக ஓடி ஸ்கூட்டர் மீதும் மோதியது. இந்த விபத்தில் தந்தை-மகன் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடந்த இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

பழுதடைந்த டேங்கர் லாரி

நாகை மாவட்டம் நரிமணத்தில் இருந்து குருடாயிலை ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புறவழிச்சாலையில் பாதரக்குடி என்ற இடத்தில் சென்றபோது திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் டிரைவர், லாரியை சாலையோரத்தில் நிறுத்தி வைத்து இருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு பஸ், சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அரசு பஸ் மோதியது

இந்த பஸ்சை திண்டுக்கல் மாவட்டம் பழனி அமரபூண்டி பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் பிரதாப்(வயது 38) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக திருவண்ணாமலை மாவட்டம் கோதண்டவாடி கருமாரப்பட்டி ரேடியோ ஷோரூம் தெருவை சேர்ந்த விஜயசாரதி(48) என்பவர் பணியில் இருந்தார்.

அரசு பஸ் பாதரக்குடி என்ற இடத்தில் வந்தபோது அங்கு சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி

மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ், எதிரே ஒரு ஸ்கூட்டரில் வந்த கடலூர் மாவட்டம் சிதம்பரம் எம்.கே.தோட்டம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன்(39), சிதம்பரம் வெய்யலூர் வள்ளுவர் தெருவை சேர்ந்த பத்மநாபன்(49), மற்றும் அவருடைய மகன் அருள்ராஜ்(22) ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாறுமாறாக ஓடிய அரசு பஸ், புறவழிச்சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில்(தடுப்பு சுவர்) மோதி நின்றது. விபத்துக்குள்ளான அரசு பஸ் உருக்குலைந்து, அதில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

26 பயணிகள் படுகாயம்

இதனால் பயணிகள் அனைவரும் கூச்சல் போட்டனர். பயணிகளின் அலறல் சத்தம் மற்றும் டேங்கர் லாரியின் மீது அரசு பஸ் மோதிய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சீர்காழி தீயணைப்பு நிலையம், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் 108 ஆம்புலன்சு பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கவிதா, ஆனந்தன், ஜெயஸ்ரீ, லட்சுமி நாராயணன், ராஜ்மோகன், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார், மனோஜ் குமார், அகமது, கமலா, திருவாரூர் காட்டூரை சேர்ந்த சுரேஷ் உள்பட பயணிகள் 26 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கண்டக்டரும் பலி

அங்கு சிகிச்சை பலனின்றி பஸ் கண்டக்டர் விஜயசாரதி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மேலும் 5 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து வெளியாகும் குருடாயிலால் தீவிபத்து ஏற்படாத வகையில் சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து டேங்கர் லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், புயல் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து தடை

இந்த விபத்து காரணமாக நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் நேற்று காலை வரை புறவழிச்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்