சென்னை வந்த அரசு பஸ், டேங்கர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது; தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி
சென்னை வந்த அரசு பஸ் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மற்றும் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் தந்தை-மகன் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
சீர்காழி,
நாகை மாவட்டம் நரிமணத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த லாரி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புறவழிச்சாலையில் பாதரக்குடி என்ற இடத்தில் சென்றபோது திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் டிரைவர், லாரியை சாலையோரத்தில் நிறுத்தி வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு பஸ், சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அரசு பஸ் மோதியது
இந்த பஸ்சை திண்டுக்கல் மாவட்டம் பழனி அமரபூண்டி பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் பிரதாப்(வயது 38) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக திருவண்ணாமலை மாவட்டம் கோதண்டவாடி கருமாரப்பட்டியை சேர்ந்த விஜயசாரதி(48) என்பவர் இருந்தார்.
அரசு பஸ் பாதரக்குடி பகுதியில் வந்தபோது அங்கு சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி
மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ், எதிரே ஒரு ஸ்கூட்டரில் வந்த கடலூர் மாவட்டம் சிதம்பரம் எம்.கே.தோட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன்(39), சிதம்பரம் வெய்யலூரை சேர்ந்த பத்மநாபன்(49), மற்றும் அவருடைய மகன் அருள்ராஜ்(22) ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த னர்.
தாறுமாறாக ஓடிய அரசு பஸ், புறவழிச்சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில்(தடுப்பு சுவர்) மோதி நின்றது. விபத்துக்குள்ளான அரசு பஸ் உருக்குலைந்து, அதில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
26 பயணிகள் படுகாயம்
இதில் பஸ்சில் இருந்த பஸ் கண்டக்டர் விஜயசாரதி, சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கவிதா, ஆனந்தன், ஜெயஸ்ரீ, லட்சுமி நாராயணன், ராஜ்மோகன் உள்பட 27 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பஸ் கண்டக்டர் விஜயசாரதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மற்ற 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.