வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு தினமும் அரசு பஸ் இயக்க வேண்டும்
வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் அரசு பஸ்சை, தினமும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் அரசு பஸ்சை, தினமும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமும் காலையில் இயக்கப்பட்டது
நாகை மாவட்டம் வேதாரண்யம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இருந்து தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு கடந்த பல ஆண்டுகளாக தினமும் அதிகாலையில் ஒரு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் பட்டுக்கோட்டை மார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன் அடைந்து வந்தனர்.
பயணிகள் அவதி
இந்த நிலையில் தற்போது மதுரைக்கு காலையில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டு வாரத்தில் 3 நாட்கள் பயணிகளின் கூட்டத்தை பொருத்து இயக்கப்படுகிறது.மற்ற நாட்களில் இந்த பஸ் சென்னைக்கு இயக்கப்படுகிறது. இதனால் மதுரைக்கு செல்லும் பயணிகள் பல பஸ்களில் சென்று மதுரைக்கு செல்லும் நிலை உள்ளது.இதன் காரணமாக காலவிரயமும், கூடுதல் பணமும் செலவு ஏற்படுவதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு தினமும் அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனாட்சி அம்மன் கோவில்
இதுகுறித்து சமூக ஆர்வலர் சித்திரவேல் கூறுகையில், வேதாரண்யத்தில் இருந்து தினந்தோறும் மதுரைக்கு அதிகாலையில் அரசு பஸ் இயக்கப்பட்டது. இது அந்த பகுதி மக்களுக்கு மிகவும் சவுகரியமாக இருந்து வந்தது. வேதாரண்யத்தில் இருந்து மதுரை ஐகோர்ட்டு, மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மருத்துவ சிகிச்சை என பல்வேறு வசதிக்காக மதுரைக்கு சென்று வந்தனர்.தற்போது மதுரைக்கு வாரத்தில் 3 நாள் மட்டும் இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தினந்தோறும் வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு பஸ் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வருவாய் கிடைக்கும்
தோப்புத்துறையை சேர்ந்த அகமத்துல்லா கூறுகையில், வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு தினமும் அதிகாலையில் பஸ் இயக்கப்பட்டதால் பயணிகள் பயன்பெற்றனர்.தற்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மதுரைக்கு பஸ் இயக்கப்படுவதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிக்கு செல்ல வேதாரண்யம் பகுதி மக்கள், பல்வேறு பஸ்களில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே மதுரைக்கு தினமும் பஸ் இயக்கினால் பயணிகள் பயன் அடைவார்கள், போக்குவரத்து துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்றார்.