ஒட்டன்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்; பிளஸ்-2 மாணவர் உடல் கருகி பலி
ஒட்டன்சத்திரத்தில், மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கிய பிளஸ்-2 மாணவர் உடல் கருகி பலியானார். பிறந்த நாளில் அவர் உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
ஒட்டன்சத்திரத்தில், மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கிய பிளஸ்-2 மாணவர் உடல் கருகி பலியானார். பிறந்த நாளில் அவர் உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பிறந்த நாள் கொண்டாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ரெயில்வே மேம்பால பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் பழனியில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளராக பணிபுரிகிறார். அவருடைய மகன் பிரவீன் (வயது 17). இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
பிரவீனுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். தனது நண்பர்களுடன், பிறந்த நாளை கொண்டாட அவர் திட்டமிட்டார். அதன்படி தன்னுடன் படிக்கிற தனது நண்பர்களான நாகனம்பட்டியை சேர்ந்த ஆகாஷ் (17), நரிப்பட்டியை சேர்ந்த நரசிம்மன் (17) ஆகியோருடன் ஒட்டன்சத்திரத்துக்கு வந்தார்.
இவர்களுடன் சேர்ந்து, பிரவீன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதன்பிறகு அவர்கள் 3 பேரும் ஓட்டலுக்கு செல்ல முடிவு செய்ததாக தெரிகிறது.
மோட்டார் சைக்கிள் மீது மோதல்
இதனையடுத்து ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து, திண்டுக்கல் சாலையில் மோட்டார் சைக்கிளில் 3 பேரும் சென்றனர். மோட்டார் சைக்கிளை பிரவீன் ஓட்டினார். ஆகாஷ், நரசிம்மன் ஆகியோர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தனர்.
ஒட்டன்சத்திரம் ரெயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில், மதுரையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. திடீரென மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த ஆகாஷ், நரசிம்மன் ஆகியோர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பிரவீன் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.
தீயில் கருகி பலி
இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் திடீரென பஸ்சில் தீப்பற்றியது. இதேபோல் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் சேதமடைந்து பெட்ரோல் வெளியேறியது. சிறிதுநேரத்தில், மோட்டார் சைக்கிளில் இருந்து சிந்திய பெட்ரோலிலும் தீப்பற்றியது.
அந்த தீ மள, மளவென பஸ்சுக்கும் பரவியது. இதனால் பஸ் கொழுந்து விட்டு எரிந்தது. இதில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவர் பிரவீன் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பஸ்சில் தீப்பற்றியதை கண்டு, அதில் பயணம் செய்த 41 பயணிகளும் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடி காயமின்றி உயிர் தப்பினர்.
எலும்புக்கூடான அரசு பஸ்
அரசு பஸ் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவை முழுமையாக எரிந்து எலும்புக்கூடு போல் மாறியது.
விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஒட்டன்சத்திரம் போலீசார், தீயில் கருகி பலியான பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேருக்கு தீவிர சிகிச்சை
இதேபோல் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆகாஷ், நரசிம்மன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளில், விபத்தில் சிக்கிய பிளஸ்-2 மாணவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் ஒட்டன்சத்திரம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.