முதியவரிடம் தங்க சங்கிலி பறிப்பு- 3 பேர் கைது
முதியவரிடம் தங்க சங்கிலி பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் நரசிம்ம அய்யர் (வயது 64). இவர் தனது மகளை கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பார்த்துவிட்டு நேற்று முன்தினம் ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் திரும்பி வந்து கொண்டிருந்தார். தென்காசி நடு பல்க் அருகே அதிகாலை சுமார் 3.30 மணிக்கு பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தென்காசி ஆபாத் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அஷ்ரப் அலி (21), மலையான் தெருவை சேர்ந்த சூர்யா (22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து நரசிம்ம அய்யரை மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 18 கிராம் தங்கச் சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் உடனடியாக அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் 3 பேரையும் நேற்று கைது செய்து, தங்க சங்கிலியை மீட்டனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் தென்காசி போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதற்கிடையே தங்கசங்கிலி பறித்து செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.