பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு

திண்டுக்கல் அருகே, கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-04-29 14:59 GMT

திண்டுக்கல் அருகே உள்ள வாழைக்காய்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். அவருடைய மனைவி கவிதா (வயது 45). நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும், வடமதுரை கொம்பேறிபட்டியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு சென்றனர். இரவு 10 மணியளவில், திண்டுக்கல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் இவர்கள் வந்து கொண்டிருந்தனர். திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் வந்தது.

அப்போது ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். இதில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், கவிதா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். பின்னர் அவர்கள், மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து ரவிக்குமார் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து விரட்டி சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்