ஆடுமேய்த்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை

பேரணாம்பட்டு அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணை, 1½ பவுன் கம்மலுக்காக காது மற்றும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.;

Update: 2023-07-06 18:58 GMT

ஆடு மேய்க்க சென்றார்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி (வயது 50). மோகன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பாண்டியன் (25), அசோக்குமார் (23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகின்றனர். மகள் அபிநயா (19), பி.எஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.

வளர்மதி 3 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச்செல்வது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 12 மணியளவில் வளர்மதி தான் வளர்த்து வரும் ஆடுகளை அருகிலுள்ள உடையார் தெருவையொட்டியுள்ள அலங்கர மாந்தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுள்ளார்.

கழுத்தை அறுத்து படுகொலை

அங்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டு வீட்டிற்கு தேவையான விறகுகள் மற்றும் தேங்காய்கள், காளான் ஆகியவற்றை சேகரித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் வளர்மதியின் காதில் அணிந்திருந்த சுமார் 1½ பவுன் கம்மல்களை பறிப்பதற்காக கத்தியால் காதுகளை அறுத்து கம்மல்களை கொள்ளையடித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பித்து ரத்த காயத்துடன் வளர்மதி சிறிது தூரம் ஓடியிருக்கிறார். ஆனால் மர்ம ஆசாமிகள் அவரை பின்னால் துரத்திச்சென்று கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் வளர்மதி பிணமாக கிடந்ததை மாலை சுமார் 4 மணியளவில் அந்த வழியாக விவசாய நிலத்திற்கு சென்ற மலர் என்ற பெண் பார்த்து கிராமத்திற்கு சென்று தகவல் தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

உடனடியாக இது குறித்து கிராம மக்கள் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) இருதயராஜ், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த வளர்மதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் ஸ்ருதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வேலூரில் இருந்து மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்திலிருந்து சாத்கர் கிராமம் கீழ் ரோடு வழியாக கானாற்றிலுள்ள சுடுகாடு கிணறு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

கைரேகை நிபுணர் தமிழ்மணி, தடவியல் நிபுணர் சேதுராமன் குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்