காரில் வந்து விநாயகர் சிலை திருடிய கும்பல் சிக்கியது

வாணியம்பாடி அருகே நள்ளிரவில் காரில் வந்து விநாயகர் சிலையை திருடிய 4 பேரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2023-08-22 19:07 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே நள்ளிரவில் காரில் வந்து விநாயகர் சிலையை திருடிய 4 பேரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சிலை திருட்டு

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே உள்ள தீர்த்தமலை பகுதியில் விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் ஒரு காரில் 4 பேர் வந்து கோவிலில் இருந்து விநாயகர் சிலையை திருடி செல்வதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொதுமக்கள் காரை மடக்கி, அதில் இருந்த 4 பேரை பிடித்து ஆலங்காயம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நல்லது நடக்கும்...

விசாரணையில் அவர்கள் அணைக்கட்டு அருகே உள்ள மருதவள்ளிபாளையத்தில் கடந்த 18-ந் தேதி விநாயகர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ததும், அப்போது ஊரில் உள்ள ஒருசிலர் விநாயகர் சிலையை திருடிவந்து கோவிலில் வைத்தால் ஊருக்கு நல்லது நடக்கும் என்று கூறியதால் விநாயகர் சிலையை திருடியதும் தெரிய வந்தது.

பிடிபட்ட 4 பேரும் அணைக்கட்டு அருகே உள்ள மருதவள்ளிபாளையத்தை அடுத்த கத்தாரை கொல்லை பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 30), புத்தூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (32), ஒடுகத்தூரை அடுத்த வண்ணான்தாங்கலை சேர்ந்த பிரகாசம் (50), அணைக்கட்டு அடுத்த பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (32) என்பது தெரிய வந்தது.

4 பேர் கைது

இதனை தொடர்ந்து ஆலங்காயம் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் சிலை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் கோவிலில் இருந்த சாமி சிலை திருடப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்