பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் நூலகம்

வேதாரண்யத்தில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் நூலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-08-22 17:03 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் நூலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நூலகம்

வேதாரண்யம் பயணியர் மாளிகை செல்லும் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி கூடத்தில் நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 45 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இங்கு 4,100 உறுப்பினர்களும், 32 புரவலர்களும் உள்ளனர். தினமும் இந்த நூலகத்துக்கு 40 முதல் 100 பேர் வரை வந்து புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை படித்து செல்கின்றனர்.

பழுதடைந்த கட்டிடம்

இந்த நிலையில் நூலக கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மழை காலங்களில் நூலக கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிந்து புத்தகங்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

கட்டிடம் பழுதடைந்துள்ளதால் வாசகர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். சிறிய கட்டிடத்தில் நூலகம் இயங்குவதால் 45 ஆயிரம் புத்தகங்களை வைக்க இடம் போதுமானதாக இல்லை.

இடநெருக்கடி

அதிக வாசகர்கள் ஒரே நேரத்தில் வந்தால் படிக்க முடியாமல் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு நூலகம் இயங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் அருகில் புதிதாக நூலகம் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்