17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்

திண்டுக்கல் அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பியதால் பட்டாசு வெடித்து கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர்.

Update: 2023-01-21 14:25 GMT

மந்தை பெரியகுளம்

திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடியில் 120 ஏக்கர் பரப்பில் மந்தை பெரியகுளம் உள்ளது. சந்தானவர்த்தினி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் சக்கம்பட்டி குளத்தில் தேங்கி, அதன்பின்னர் மந்தை பெரியகுளத்துக்கு போய் சேரும்.

இந்த குளத்தில் தேங்கும் தண்ணீரை நம்பி தாமரைப்பாடி, கோவில்யாகப்பன்பட்டி, கல்லாத்துப்பட்டி, தம்பிநாயக்கன் பாறைப்பட்டி, தன்னிச்சிபாறைப்பட்டி, கம்மாளபட்டி, சாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உள்ளன.

வாய்க்கால் சீரமைப்பு

இந்தநிலையில் குளத்தின் நீர்வரத்து வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததால், கடந்த 17 ஆண்டுகளாக குளத்தில் தண்ணீர் நிரம்பாமல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து, சக்கம்பட்டி வரத்து வாய்க்காலை சுத்தம் செய்து, தூர்வாரினர்.

மேலும் மந்தை பெரியகுளத்தை சுற்றிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டனர். தற்போது சந்தானவர்த்தினி ஆற்றில் தண்ணீர் செல்வதால், சக்கம்பட்டி குளம் நிறைந்து தாமரைப்பாடி பெரிய மந்தைகுளமும் நிரம்பி மறுகால் பாய்கிறது.

பட்டாசு வெடித்து உற்சாகம்

17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளத்தால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாதி, மத வேறுபாடின்றி மக்கள் ஒன்று சேர்ந்து மேளதாளம் முழங்க குளத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

அதன்பிறகு பெண்கள் குலவையிட்டு பூஜைகள் செய்து, தண்ணீரில் மலர்களை தூவினர். மேலும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர். இதில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்