சென்னையில் வி.பி.சிங்குக்கு முழு உருவ சிலை; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு
வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.;
சென்னை,
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர், சமூகநீதிக் காவலர் மறைந்த வி.பி.சிங்க்கு திராவிட மாடல் அரசு மரியாதை செய்ய நினைக்கும் மகத்தான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங்-க்கு மகனாகப் பிறந்தவர்தான் விஸ்வநாத் பிரதாப் சிங்.
1969-ம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வென்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி, மத்திய மந்திரி ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தார். தேசிய முன்னணியை உருவாக்கி 1989-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார். வி.பி.சிங் பிரதமராக இருந்த 11 மாதங்கள் தான் என்றாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானவை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தான் பி.பி. மண்டல் தலைமையிலான ஆணையம்.
பாராட்டினார்
சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, மண்டல் பரிந்துரையின் மத்திய அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங். அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல, ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல, ஆனாலும் செய்து காட்டியவர் வி.பி.சிங்.
'சில நேரங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பதே நல்லது' என்று சொல்லி பிரதமர் பதவியை விட்டு விலகியவர் வி.பி.சிங். 'வி.பி.சிங்கை தூக்கில் கூடப் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியைக் கொடுங்கள்' என்று கூறும் அளவிற்கு சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரின் நலனில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.
தமிழ்நாட்டைத் தனது இரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார். தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக் கொண்டார். கருணாநிதியை சொந்த சகோதரனைப் போல மதித்தார். ''எனக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் என் பக்கத்தில் இருந்து கருணாநிதி என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். தனது ஆட்சியைப் பற்றிக் கூட பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக, லட்சியத்துக்காக என்னோடு இருந்த கருணாநிதி'' என்று பாராட்டியவர் வி.பி.சிங்.
மிகப்பெரிய வாய்ப்பு
1988-ம் ஆண்டு தேசிய முன்னணி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றபோது, மாபெரும் ஊர்வலத்தை தலைமை தாங்கி நான் நடத்தி வந்தேன். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வெள்ளுடை தரித்து அணிவகுத்த வீரக் காட்சியை மேடையில் இருந்தபடி பார்த்து வணங்கினார் வி.பி.சிங். அவர் பிரதமர் ஆனபின்னர், டெல்லி சென்றோம்; சட்டமன்றக் குழுவோடு நானும் சென்றேன். அப்போது என்னை அவரிடத்தில் அறிமுகப்படுத்தினார்கள்.
''இவரை எனக்கு அறிமுகப்படுத்துகிறீர்களா? இவரை எனக்குத் தெரியாதா? நீங்கள்தானே சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்தினீர்கள்!'' என்று சொன்னது, என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன்.
அத்தகைய சமூகநீதிக் காவலர் அளித்த ஊக்கத்தின் உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூகநீதிப் பார்வையில், சமூகநீதிப் பயணத்தில் கொஞ்சமும் சலனமும், சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வழிக்காட்டும்
இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்லி வந்த மத்திய அரசை, 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொள்ள வைத்தது, தி.மு.க. உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள்தான். அதனை மனதில் வைத்துத்தான், அகில இந்திய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அதற்கான முதல் கூட்டமானது காணொலி மூலமாக நடந்திருக்கிறது. அகில இந்திய அளவில் பெரும்பாலான கட்சிகள் அதில் பங்கெடுத்தன. அகில இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழிகாட்ட வேண்டும் என்று அக்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறோம். சி.ஆர்.பி.எப். தேர்வானது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரிக்கு நான் கடிதம் அனுப்பி வைத்தேன். தி.மு.க. மாணவரணியும், இளைஞரணியும் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட அறிவிப்பைச் செய்தார்கள். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட அனைத்து மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வுகளும் நடைபெறும் என்ற வெற்றிச் செய்தி நமக்குக் கிடைத்திருக்கிறது.
சென்னையில் சிலை
அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய கொள்கை உரத்தை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தவர் வி.பி.சிங். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண தனது இல்லத்தில் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தைக் கூட்டி 'இப்போது கருணாநிதி சொல்லப் போவதுதான் என் கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங்.
சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில், கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரானவி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை சட்டசபையில் உள்ள அனைத்து கட்சிகளும் வரவேற்றது.