தண்ணீர் குடித்தபோது பானைக்குள் தலை சிக்கியதால் மிரண்டு ஓடிய பசுமாடு கிணற்றில் விழுந்து பலி
தண்ணீர் குடித்தபோது பானைக்குள் தலை சிக்கியதால் மிரண்டு ஓடிய பசுமாடு கிணற்றில் விழுந்து பலியானது.
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. நேற்று வசந்தகுமார் மாடுகளை தோட்டத்துக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது தோட்டத்தில் உள்ள அலுமினிய பானையில் இருந்த தண்ணீரை பசுமாடு ஒன்று குடித்தது. எதிர்பாராதவிதமாக அந்த பானைக்குள் பசுமாட்டின் தலை சிக்கிக்கொண்டது. இதனால் மிரண்ட பசுமாடு தலைதெறிக்க ஓடியது. அப்போது அங்குள்ள தரைமட்ட கிணற்றுக்குள் அந்த மாடு தவறி விழுந்து தத்தளித்தது.
இதுகுறித்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி கயிறு கட்டி பசுமாட்டை வெளியே கொண்டு வந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் பசுமாடு பரிதாபமாக இறந்தது.