போலீசாரால் தேடப்பட்ட நண்பர் குளச்சல் போலீசில் சரண்

வாக்குவாதத்தில் கீழே தள்ளிவிட்டதில் காங்கிரஸ் நிர்வாகி இறந்த வழக்கில் தேடப்பட்ட அவரது நண்பர் குளச்சல் போலீசில் சரணடைந்தார். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-09-13 22:09 GMT

குளச்சல்:

வாக்குவாதத்தில் கீழே தள்ளிவிட்டதில் காங்கிரஸ் நிர்வாகி இறந்த வழக்கில் தேடப்பட்ட அவரது நண்பர் குளச்சல் போலீசில் சரணடைந்தார். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

காங்கிரஸ் நிர்வாகி

குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் காரவிளையை சேர்ந்தவர் லாசர் (வயது 62), சோடா கம்பெனி நடத்தி வந்தார். பின்னர், வயது முதிர்வு காரணமாக வீட்டில் இருந்து வந்தார். மேலும், இவர் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவருடைய நண்பர்கள் குளச்சல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த செல்லப்பன் (65), கூத்தாவிளையை சேர்ந்த தேவதாஸ் (48).

கீழே தள்ளினர்

கடந்த 5-ந்தேதி இரவு லாசர் குளச்சலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அருகில் உள்ள டீக்கடை பகுதியில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த செல்லப்பன், தேவதாஸ் ஆகிய 2 பேரும் தகாத வார்த்தையால் பேசி லாசரை கீழே தள்ளிவிட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த லாசர் நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லாசர் நேற்று முன்தினம் மாலையில் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து குளச்சல் போலீசார் இந்த வழக்ைக கொலை வழக்காக மாற்றி செல்லப்பன், தேவதாஸ் ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர்.

நண்பர் சரணடைந்தார்

இந்தநிலையில் போலீசார் தேடி வந்த தேவதாஸ் நேற்று குளச்சல் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், போலீசார் அவரை இரணியல் கோர்ட்டில் ஆஜப்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய செல்லப்பனை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்