துர்நாற்றம் வீசும் கொல்லன் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்

துர்நாற்றம் வீசும் கொல்லன் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்;

Update:2022-11-10 00:15 IST

ஓகைப்பேரையூரில் துர்நாற்றம் வீசும் கொல்லன் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொல்லன்குளம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில் கொல்லன்குளம் உள்ளது. இந்த குளம் 20 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக பராமரிக்கப்பட்டு அந்த பகுதி மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. வெள்ளையாற்றில் இருந்து வரும் தண்ணீரை வடிகால் வாய்க்கால் மூலம் குளத்திற்கு கொண்டு சென்று குளத்தில் தண்ணீரை தேக்கி வைத்து குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கோடைக்காலத்திலும் இக்குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறையாத நிலையில் இருந்தது.

துர்நாற்றம்

கடந்த சில ஆண்டுகளாக வடிகால் வாய்க்கால் மற்றும் குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் சூழ்ந்ததால் ஆற்றில் இருந்து குளத்திற்கு நேரடியாக தண்ணீர் செல்ல வழியில்லாமல் இருக்கிறது. தற்போது மழை தண்ணீர் மட்டுமே குளத்தை நிரப்பி இருக்கின்றது. குளத்தில் தேங்கியிருக்கும் மழை தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே துர்நாற்றம் வீசும் கொல்லன்குளத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோய் தொற்று ஏற்படும் அபாயம்

இதுகுறித்து ஓகைப்பேரையூரை சேர்ந்த பானுமதி:- கொல்லன்குளம் சில ஆண்டு களுக்கு முன்பு முறையாக தூர்வாரப்பட்டு, குளத்தின் கரையோரத்தில் படித்துறை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாமல் போனதால் தற்போது மாசு படர்ந்திருக்கும் தண்ணீரால் சுகாதார கேடு ஏற்படுத்தும் குளமாக மாறி வருகிறது. குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. படித்துறைகள் இடிந்து விழுந்து இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. குளத்தில் தற்போது மழை தண்ணீர் மட்டுமே தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து தர வேண்டும் என்றார்.

தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்

ஓகைப்பேரையூரை சேர்ந்த வனிதா:- குளத்திற்கு வடிகால் வாய்க்கால் இல்லாததால், ஆற்றில் இருந்து தண்ணீரை குளத்தில் தேக்கி வைக்கவோ, தேவையற்ற தண்ணீரை வெளியேற்றவோ முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை தண்ணீர் தான் குளத்தில் தேங்கி நிற்கிறது. இதனால், பல மாதங்களாக ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் மழை தண்ணீர் மாசு படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. குளம் உள்ள இடத்தின் அருகாமையில் வீடுகள் இருப்பதால், அங்கு உள்ள மக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அதிகளவில் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே வடிகால் வாய்க்கால் ஏற்படுத்தி குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்