விசைப்படகில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற வெளிநாட்டு கப்பல்
நடுக்கடலில் குமரி விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதியதில் பரிதவித்த 14 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குளச்சல்:
நடுக்கடலில் குமரி விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதியதில் பரிதவித்த 14 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குமரி விசைப்படகு
குளச்சல் மரமடிய தெருவை சேர்ந்தவர் குருசப்பன். இவருடைய மகன் ரெஸ்லின் டானி (வயது 38). இவர் அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதாரராக சேர்ந்து விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 12-ந் தேதி வழக்கம்போல் ரெஸ்லின் டானி விசைப்படகு குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றது.
படகில் ரெஸ்லின் டானி மற்றும் அதே பகுதிைய ேசர்ந்த ரீகன் (36), ஜார்ஜ் (43), மர்வின் (37), ராமன்துறையை சேர்ந்த சோனி (53), ஜாண்சன் (50), சின்னமுட்டத்தை சேர்ந்த தியோ (33), அழிக்கால் பகுதியை சேர்ந்த எட்வின்ராஜ் (27), சிபு (27) மற்றும் ஒடிசாவை சேர்ந்த கேதர் ஜெனோ (28), அமீர் (43), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கமலேஷ் (26), லோகேஸ் (23), பின்று (21) ஆகிய 14 பேர் இருந்தனர்.
கப்பல் மோதியது
14-ந்தேதி மதியம் இவர்களது படகை கன்னியாகுமாரி கடல் பகுதியில் இருந்து 69 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி இருந்தனர். மேலும், முந்தினநாள் பிடித்த மீன்களை மீனவர்கள் ஐஸ் போட்டு பதப்படும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் தூண்டிலை சரி செய்தபடியும், சிலர் சமையல் வேலையும் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் எதிர்பாராத விதமாக விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
மரண பீதியில்...
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் விசைப்படகில் இருந்த மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு படகுக்குள்ளேயே விழுந்தனர். பின்னர் அவர்கள் என்ன? நடந்தது என்பதை அறிவதற்குள் படகு ஒருபுறகுமாக சரியத்தொடங்கியது.
கப்பல் மோதியதில் படகில் ஆங்காங்கே விரிசல் விழுந்தது. படகின் உள் அறைகளிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து படகை இயக்கினால் படகுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகிற்கு இதுபற்றி தெரிவித்து உதவிக்கு அழைத்தனர்.
இந்தநிலையில் கப்பல் மோதிய விசைப்படகு தொடர்ந்து சரிய தொடங்கியது. இதனால் 14 மீனவர்களும் மரண பீதியில் செய்வதறியாது கூச்சலிட்டனர்.
14 மீனவர்கள் மீட்பு
பின்னர் சிறிது நேரத்தில் உதவிக்கு அழைத்த படகு விரைந்து வந்தது. அதைதொடர்ந்து துரிதமாக செயல்பட்டு அந்த மீனவர்களை சேதமடைந்த படகில் இருந்த 14 மீனவர்களை மீட்டனர்.
பின்னர், சேதமடைந்த விசைப்படகையும் கயிறு கட்டி மீட்டு நேற்று காலை குளச்சல் மீன்பிடித்துறைமுகம் கொண்டு வந்தனர்.
கப்பல் மோதிய வேகத்தில் படகுக்குள் தூக்கி வீசப்பட்டதில் மீனவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சேதமடைந்த விசைப்படகின் மதிப்பு ரூ.1.25 கோடி என கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இந்த சம்பவம் குறித்து ரெஸ்லின் டானி குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சேதமடைந்த படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் விபத்தை ஏற்படுத்திய லைபீரியா நாட்டு போஸ்டன் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார்.
குமரி கடலில் விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதி விட்டு சென்ற சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.