ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டும்
செண்பகத்தோப்பு அணை அருகே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
செண்பகத்தோப்பு அணை அருகே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
செண்பகத்தோப்பு அணை
ஜமுனாமரத்தூர் கானமலை ஊராட்சி செண்பகத்தோப்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
செண்பகத்தோப்பு கிராமத்தில் 5 தலைமுறைகளாக சுமார் 900 குடும்பங்கள் மேல்செண்பகத்தோப்பு மற்றும் கீழ்செண்பகத்தோப்பு பாலமதி பகுதியில் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு செண்பகத்தோப்பு அணை கட்டப்பட்டது. வழக்கமாக இந்த கிராம மக்கள் நீர்தும்பை, முருகமந்தை, புளியங்குப்பம், காவூர், கவும்பட்டு ஆகிய கிராமங்கள் சுற்றி வந்து மழை நீர் செல்லும் ஆற்றை கடந்து செல்ல வேண்டும்.
தற்போது பெய்த மழையினால் ஆற்றுப்பாதையில் அதிகளவில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் அணையின் அருகிலும், மக்கள் நடந்து செல்லும் பகுதியிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.
மேம்பாலம் வேண்டும்
இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், உடல் நலம் சரியில்லாத நோயாளிகளும் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்று வர முடியாமலும் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் வனப்பகுதியை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்கள் நடந்து செல்லும் பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித் தர வேண்டும். மேலும் அந்த பகுதியில் தற்காலிக சாலை வசதி செய்து தருமாறும், உபரி நீரை வெளியேற்றி தருமாறும் கேட்டுகொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.