நெல்லையை தலைமையிடமாக கொண்டு தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும்; டி.ஜி.பி. ரவி தகவல்

ராதாபுரம், மானூரில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, நெல்லையை தலைமையிடமாக கொண்டு தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி. பி.கே.ரவி கூறினார்.

Update: 2022-08-26 19:30 GMT

ராதாபுரம், மானூரில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, நெல்லையை தலைமையிடமாக கொண்டு தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி. பி.கே.ரவி கூறினார்.

டி.ஜி.பி. ஆய்வு

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி.ஜி.பி. பி.கே.ரவி நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் மருதகுளம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு தற்காலிக பயிற்சி மையத்துக்கு சென்று, அங்கு பயிற்சி பெற்று வரும் 145 வீரர்களை சந்தித்து பேசினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள், வசதிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகம் முன்பு மரக்கன்று நட்டினார். மேலும் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது தென் மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் விஜயகுமார், நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் டி.ஜி.பி. பி.கே.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

புதிய மண்டலம்

தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தீயணைப்புத்துறை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 1,200 புதிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான பயிற்சி வருகிற 6-ந்தேதி முடிவடைகிறது. பயிற்சி அளிப்பதற்கு சிறந்த மையமாக நெல்லை உள்ளது. தற்போது பயிற்சி நிறைவடைந்த உடன் அவர்கள் காலி பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள். கோவை மண்டலத்தில் இருந்து சேலம் பிரிக்கப்பட்டு அங்கு புதிய மண்டலம் உருவாக்கப்பட உள்ளது. இதேபோல் மதுரை மண்டலத்தில் இருந்து நெல்லையை பிரித்து புதிய மண்டலம் உருவாக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும்.

மானூர், ராதாபுரம்

தமிழகத்தில் புதியதாக 5 தீயணைப்பு நிலையங்கள் அமைய உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மானூர் மற்றும் ராதாபுரம் ஆகிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

வடகிழக்கு பருவ மழையையொட்டி ஆற்றின் ஓரங்களில் பாதுகாப்பு பணிகள் துரிதப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், மாவட்ட சூப்பிரண்டு சரவணன், மாநகர துணை கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் பி.கே.ரவியை சந்தித்து பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்