கடையில் திடீர் தீ விபத்து
ஆம்பூர் அருகே கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் எரிந்து நாசமாயின.
ஆம்பூர் டவுன் பஜார் பகுதியில் மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், விளையாட்டு பொருட்கள் உள்பட அனைத்து வகையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவு நேரத்தில் கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் எரியத்தொடங்கி பக்கத்தில் உள்ள கடைகளுக்கும் பரவியது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கும், வாணியம்பாடி, திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
மேலும் இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.