கால்நடை பண்ணை வளாகத்தில் தீ விபத்து

புதுக்கோட்டை கால்நடை பண்ணை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 ஏக்கர் புற்கள் எரிந்து நாசமானது.

Update: 2023-07-29 19:00 GMT

கால்நடை பண்ணை

புதுக்கோட்டையில் பால் பண்ணை பஸ் நிறுத்தம் அருகே மாவட்ட கால்நடை பண்ணை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பின்புறம் கறவை மாடுகள் கால்நடை துறையினரால் பராமரிக்கப்படுகிறது. இந்த மாடுகளுக்கான தீவன பொருட்கள், வைக்கோல்கள் உள்ளிட்டவை இங்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஏக்கர் பரப்பளவில் வயல்வெளியில் புற்கள் தீவனமாக வளர்க்கப்படுகிறது. இதில் தோட்டம் போல் சில மரங்களும் காணப்படுகிறது.

இந்த நிலையில் புற்கள் பரப்பில் ஒரு பகுதியில் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ காற்றில் வேகமாக பரவி மள மளவென எரிந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தங்களது வீடுகளில் உள்ள தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும் பொதுமக்கள் வாளி, குடங்களில் தண்ணீரை பிடித்து ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதேநேரத்தில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

புற்கள் எரிந்து நாசம்

தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வாகனங்களின் தண்ணீர் பற்றாத நிலையில் தனியார் குடிநீர் லாரி மூலம் ஒரு வண்டி தண்ணீர் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டது. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் புகை மூட்டம் இருந்தது. தீயில் 2 ஏக்கர் பரப்பளவில் புற்கள் எரிந்து நாசமாகின. ேமலும் 4 பன்றிகள், பாம்புகள், ஆமை உள்ளிட்ட சிறுவன உயிரினங்கள் தீயில் கருகி இறந்தன.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கால்நடைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்