2 வியாபாாிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் அபராதம்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 வியாபாாிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;
திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த ஆண்டு, திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலக சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெல்லும் புகையிலை இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் எரியோடு பகுதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 46), சக்திவேல் (40) ஆகியோர் புகையிலையை விற்பனைக்காக வெளியூருக்கு அனுப்ப கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியில் கொண்டு வரப்பட்ட 370 கிலோ மெல்லும் புகையிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அதுதொடர்பாக 2 பேர் மீது 3 பிரிவுகளின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, திண்டுக்கல் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு பிரியா விசாரித்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேருக்கும் தலா ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.